போதை மருந்து கொடுத்து காதலியை ஏமாற்றிய கொடூரன்

Girl Do Shocking Things To Keep Her Boy Friend

ஆறாம் வகுப்பில் பள்ளிச் சுற்றுலாவிற்கு 600 ரூபாய் கொடுக்க வேண்டும். ஆசிரியர் சொல்லும் போதே வயிறு கலங்கியது. அம்மா துடைப்பத்தை எடுத்துக் கொண்டு என்னை துரத்துவது போல பிரம்மை. அவ்ளோ பணமா? அதெல்லாம் வேண்டாம் ஸ்கூலுக்கு படிக்க தான போற என்று அப்பாவின் வசை சொற்கள்.

அக்காளிடம் கெஞ்சினாள் கொஞ்சம் தேற்றலாம் என்று மனதில் கணக்கு போட்டுக் கொண்டேன். உடன் படித்த தோழிகள் அடுத்தடுத்த நாட்களில் பணம் கொண்டு வந்து கொடுத்தார்கள். ஏய்…, நாங்க எல்லாம் போறோம். நீ வர்லையா ஜாலியா இருக்கும். மூணு நாள் ஃபிரண்ட்ஸ்ஸோட இருக்கலாம்… வீட்ல கொஞ்சம் கேளுப்பா என்றார்கள். என்னையும் ஒரு சிலரையும் தவிர அத்தனை பேரும் சுற்றுலாவிற்கு பேர் கொடுத்திருந்தார்கள்.

தோழிகள் எல்லாம் சுற்றுலா தொகையையும் போக அங்கே செலவுக்கு என்று சொல்லி ஐநூறு ரூபாய் வரை பெற்றோரிடம் கரந்து வந்திருந்தார்கள். 600க்கே வழியில்லை என்னும் போது மேல் செலவுக்கு எங்கிருந்து காசு வாங்க….

முதலில் 600 ரூபாயை தேற்றுவோம் என்று சொல்லிக் கொண்டு வீட்டில் கேட்கத் துவங்கினேன். இரண்டு நாட்கள் பட்டினி கிடந்து, அடம் பிடித்து அழுது 600 ரூபாய் வாங்கிவிட்டேன். இது தான் கடைசி இனி உனக்கு டூர் கிடையாது என்று சொல்லியே அனுப்பிவைத்தார்கள். அது ப்ரைவேட் வேன் எங்கள் பள்ளி குழந்தைகளை ட்ரிப் அடிப்பான். சில நேரங்களில் பொது மக்களை ஏற்றிக் கொண்டு எக்ஸ்ட்ரா டிக்கெட் போட்டு சம்பாதிப்பான் அது தனி கணக்கு. நான் சென்ற போதும் பொதுமக்களில் சிலர் இருந்தார்கள்.

ஒரு சீட் பிடித்து உட்கார்ந்து கொண்டேன். மனம் முழுக்க சந்தோஷம் நானும் நண்பர்களுடன் சுற்றுலா செல்லப்போகிறேன் என்று உற்சாகமாக இருந்தேன். அப்பாவும் அம்மாவும் இனி பணம் கொடுக்க மாட்டோம் என்று மிரட்டிய எதுவும் நினைவில் இல்லை.

பள்ளி வாசலில் வேன் நின்றது. நாங்கள் எல்லாரும் இறங்கினோம். வேகமாக ஸ்டாஃப் ரூமுக்கு ஓடினேன். வழியிலேயே சைட் பாக்கெட்டில் கைவிட பாக்கெட் ஓட்டையாய் இருந்தது. கிரவுண்டிலியே பேகை போட்டுவிட்டு என் சைடு பாக்கெட்டை துழாவினேன். 600 ரூபாயை காணவில்லை.

மொத்தமாக அப்படியே சுருட்டி வைத்திருந்தேன். திடீரென்று எப்படி காணமல் போகும் அப்பாவிடமிருந்து வாங்கி இங்கே தானே வைத்தேன். தோழிகள் வந்தார்கள், ஆசிரியர் வந்தார். பஸ்ல வர்றப்போ யாரோ திருடியிருப்பாங்க சரி விடு அடுத்த முறை பாத்துக்கலாம் என்று அழுது கொண்டிருந்த என்னை சமாதனப்படுத்தினார். தோழிகளும் சமாதானம் கூறினார்கள்.

வீட்டிற்கு விஷயம் தெரிந்தது இனி நடந்ததை சொல்லவும் வேண்டுமா? இதுக்கு தான் அப்பவே சொன்னேன்…. இப்ப பாரு காச தொலைச்சுட்டு வந்து நிக்கிற என்று அடி பின்னியெடுத்து விட்டார். இரவு அப்பா வந்ததும் மீண்டும் தொடர்ந்தது.

அந்த சம்பவம் அதோடு முடிந்தது தான். ஆனால் அதன் நினைவுகள் இன்று வரை தொடர்கிறது. அந்த சம்பவத்தின் தாக்கத்தினாலோ என்னவோ பணம் குறித்த பயம் எனக்கு எப்போதும் இருக்கும்.

அதே நேரத்தில் நம்ம ஏன் இன்னொருதவங்கட்ட போய் பணம் கேட்டு நிக்கணும் நம்மலே சம்பாதிச்சா என்ன என்று தோன்ற ஆரம்பித்தது. கல்லூரி படித்துக் கொண்டிருக்கும் போதே பகுதி நேரமாக வேலைக்குச் செல்ல ஆரம்பித்தேன். எல்லாருக்கும் வருகிற அதே காதல் எனக்கும் வந்து தொலைத்தது.

இந்த வயசுலயே எவ்ளோ பொறுப்பா இருக்க…. எனக்கெல்லாம் உன்னைய பாத்து தான் சம்பாதிக்கணும்னு தோணவே ஆரம்பிச்சது என்று தான் எங்களது முதல் உரையாடல் அமைந்தது.

எங்களுக்கிடையில் காதலையும் மீறிய ஓர் பந்தம் ஆட்கொண்டிருப்பதாகவே நான் உணர்ந்திருந்தேன். சிறு வயதிலிருந்து ஒரு அரவணைப்பு இல்லாமல் பயத்திலேயே வைத்திருந்ததால் அம்மா அப்பா என்றாலே எதோ பூச்சாண்டிகளை பார்ப்பது போலவே தோன்றும்.

எந்த ஒரு விஷயத்தையும் மனம் விட்டு வீட்டினரிடம் சொல்லிட முடியாத படியே என்னை வைத்திருந்தார்கள். அக்காள் இருக்கிறாள் தான். ஆனால் அவை எந்த நேரத்தில் எந்த தடத்திற்கு மாறுவாள் என்று சொல்லிட முடியாது என்பதால் அவளிடமும் அந்தளவிற்கு ஒட்டுதல் இல்லை. இந்த நேரத்தில் என்னிடம் அன்பு செலுத்த என்னை நோக்கி ஓருவன் வரும் போது நான் எப்படி விலகிச் சென்றிட முடியும்.

முதலில் சற்று தயக்கம் இருந்தாலும் ஒரு கட்டத்தில் என் வாழ்க்கையில் அவன் தான் எல்லாம் என்ற முடிவுக்கு வந்துவிட்டேன். உனக்காக என்ன வேணாலும் செய்வேன் என்று சொல்வார்களே அது எங்கள் வாழ்க்கையில் நிஜமானது.

இருவரும் சேர்ந்து கணவன் மனைவி போலவே வாழ ஆரம்பித்தோம். இன்னும் சொல்ல வேண்டுமானால் நான் ஒரு முறை கருக்கலைப்பும் செய்து கொண்டேன். என்னைப் பற்றி அவனுக்கு தெரியாது விஷயமே இல்லை என்று சொல்லலாம். கல்லூரி முடிந்து வேலைக்குச் செல்ல ஆரம்பித்தோம்.

என்னிடம் அடிக்கடி எங்களிடையே கொடுக்கல் வாங்கல் அதிகரித்தது. கொடுக்கல் வாங்கல் என்று சொல்வதை விட கொடுக்கல் மட்டும் தான் அதிகரித்திருந்தது. அவனிடம் என்ன கணக்கு கேட்பது என் காதலனாயிற்றே என்று தாராளம் காட்டினேன் .

அதை விட எனக்குள் ஒரு பயம் இருந்தது. ஆறாம் வகுப்பில் ஏற்பட்ட அந்த அனுபவத்தினால் பணம் என்னிடம் இருந்தால் தான் தொலைந்து போகும் என்று சொல்லி நானாகவே அவன் கேட்பதற்கு முன்னால் இத பத்திரமா வச்சிக்கோ தேவைப்படும் போது வாங்கிக்கிறேன் என்று சொல்லி அவனிடம் கொடுத்து வைக்க ஆரம்பித்தேன்.

நாற்பதாயிரம் சம்பளத்தில் என் செலவு இருபதாயிரம் போக வீட்டிற்கு எப்போதாவது ஐந்தாயிரம் அனுப்பி வைப்பேன் மீதத் தொகை அவன் அக்கௌண்டிற்கு சென்று விடும். அவன் கேட்பதற்கு முன்னால் நானே பல முறை அவன் அக்கவுண்டிற்கு ட்ரான்ஸ்வர் செய்திருக்கிறேன். மூன்று வருடங்கள் இருவரும் நன்றாக ஊர் சுற்றினோம்.

எங்களுக்கிடையில் சண்டை வராமல் எல்லாம் இருந்ததில்லை என்ன தான் சண்டையிட்டாலும் அடுத்த ஒரு மணி நேரத்தில் அவனிடம் சரண்டர் ஆகிடுவேன். அன்பிற்காக ஏங்கிக் கிடந்த போது வந்தவன் அவன்.

அவன் நல்லவனா கெட்டவனா என்றெல்லாம் ஆராயாது அவன் எனக்கானவன் என்று மனதில் ஏற்றி அந்த தைரியத்தில் இந்த நாட்களை எல்லாம் கடத்தியிருக்கிறேன். இப்போது அவனில்லாத நாட்களை என்னால் நினைத்து கூட பார்க்க முடியாது. அவன் மீதே தவறு இருந்தாலும் சண்டையில் இணங்கிப் போவது, மன்னிப்பு கேட்பது நானாகத்தான் இருப்பேன்.

எனக்கு அவன் தேவை அவசியமாய் இருந்தது. என்னுடைய இந்த நிலைமையை அவன் நன்றாக புரிந்து கொண்டிருந்தான். புரிந்து கொண்டான் என்பதை விட பயன்படுத்திக் கொண்டான் என்று சொல்ல வேண்டும்.

இருவரும் சேர்ந்து குடிக்க ஆரம்பிப்பது, போதை மருந்து என்று அடுத்த லெவலுக்குச் சென்றோம். இப்போது வழக்கத்தை விட செலவு அதிகரித்தது. அவனுடைய நண்பர்கள் என்று சொல்லி தினமும் ஒருவன் வந்து அறிமுகமானான். போதை ஊசி போட்டுக் கொள்ளும் அளவிற்கு வந்துவிட்டான் அவன்.

இல்லை இதோடு இதை நிறுத்த வேண்டும் அவன் அளவுக்கு மீறி சென்று விடுகிறான் என்று சொல்லி அவனிடம் இதெல்லாம் தப்பு போதும் என்ஜாய் பண்ணியாச்சு அதோட விடு அப்பறம் ரொம்ப கஷ்டம் என்று சொல்லிப் பார்த்தேன். ம்ம்ஹூம் கேட்கவில்லை. இருவருக்கும் விவாதம் பெரிதானது போ இனி உன்கிட்ட பேசமாட்டேன் என்று சொல்லி கிளம்பினேன்.

அவனுக்கும் என் மேல் அளவு கடந்த அன்பு இருக்கிறது. இரண்டு நாட்களுக்கு மேல் அவனால் தாக்கு பிடிக்க முடியாது எப்படியும் இங்கே தான் வருவான் என்று சொல்லி காத்திருந்தேன். நம்மளே போய் பேசிடலாம் என்று சில முறை தோன்றினாலும். இல்லை இது அவனுடைய நன்மைக்கு சொல்கிறோம்.

அவனே உணர்ந்து வரட்டும் என்று காத்திருந்தேன். இரண்டு நாட்களையும் கடந்து சென்றது, ஒரு வாரம் கடந்தும் அவனிடமிருந்து எந்த பதிலும் வராததால் நானே போன் செய்தேன். ஸ்விட்ச் ஆஃப்…. வீட்டிற்கு சென்றேன். இரண்டு நாள் முன்னாடி வீடு காலி பண்ணிட்டு போய்ட்டாங்கப்பா என்றார்கள். ஒரு கணம் திக்கென்றது. என்ன என்னிடம் ஒரு வார்த்தை கூட சொல்லாமல்… எப்படி அவசர அவசரமாக வீடு காலி செய்ய என்ன தேவை வந்தது. ஒன்றும் புரியாமல் தலையில் கைவைத்து உட்கார்ந்தேன்.

அவன் வருவான் அவன் என்னிடமே வந்துவிடுவான் என்று பத்து நாட்கள் வரை பித்து பிடித்தது போல திரிந்தேன். இன்னக்கி ஒரு நாள் மட்டும் என்று சொல்லி சொல்லியே தினமும் குடிக்க ஆரம்பித்தேன். அப்போதும் அவனிடம் கொடுத்து வைத்த பணம் குறித்து நினைவுக்கு வரவில்லை. அடுத்த மாதம் முதல் தேதி என்னுடைய சம்பளவும் அக்கௌண்டில் க்ரிடிட் ஆனது. 39800 க்ரிடிட் ஆன இரண்டு மணி நேரத்தில் பத்தாயிரம் குறைந்தது… யார் எடுக்கிறார்கள் என்று போனில் வந்த மெசேஜ் மற்றும் பேங்கிடம் தொடர்பு கொண்டு கேட்ட போது. வண்டி லோனுக்கு பிடித்தம் செய்திருப்பதாக சொன்னார்கள்.

வண்டியா? நான் ஒன்றும் வண்டி வாங்கவில்லையே என்று சொன்னேன்…. வண்டி லோன் மட்டுமல்லாது பர்சனல் லோன் ஒரு லட்சம் வரை எடுத்திருப்பதாகவும் அதற்கான வட்டியும் சேர்த்து தற்போது இரண்டு லட்சம் ஆகிவிட்டது என்றார்கள். ஒன்றும் புரியவில்லை. நேராக பேங்கிற்கு சென்றேன். சொல்லி வைத்தாற் போல எல்லா டாக்குமெண்ட்களிலும் அவனின் பெயர் இருந்தது. அதை விட கொடுமை என்னுடைய கையெழுத்தும் இருந்தது. எதோ ஒன்று தொண்டையை அடைத்தது. உண்மையை ஏற்றுக் கொள்ள முடியவில்லை.

அவர்களிடம் எனக்குத் தெரியாமல் இது நடந்துவிட்டது. இந்த அக்கவுண்டை கேன்சல் செய்ய முடியுமா என்று கேட்டேன்… என்னை ஏற இறங்க பார்த்துவிட்டு அதெல்லாம் முடியாது லோன் வாங்கின அக்கௌண்ட்ட எப்டி கேன்சல் செய்வீங்க என்று மிரட்டும் தொணியில் கேட்டார்.

கடந்த மூன்று வருடமாக அவனிடம் கொடுத்த வைத்த பணத்தில் எங்களுடைய செலவினங்களுக்கு போக நான்கு லட்சத்திற்கும் அதிகமாக அவன் அக்கௌண்ட்டில் தான் இருந்தது. அதைத் தவிர இப்போது இது…. எல்லாவற்றையும் தொலைத்து ஏமாந்து இன்று நடுத்தெருவில் நிற்கிறேன்… அன்பிற்காக ஏங்கிய என்னை தங்கள் இஷ்டம் போல பயன்படுத்திக் கொண்டு தூகியெறிந்து விட்டான்.

உங்கள் கருத்துக்களை கீழே Comment பண்ணவும் .