‘மறுபடியும் தப்பு செய்வேன்.. அப்போ வச்சு செய்யுங்க.. இப்போ விட்டுருங்க!’: கஸ்தூரி

நடிகை கஸ்தூரி டுவிட்டர் பக்கத்தில் திருநங்கைகளை குறிப்பிட்ட பதிவுக்கு ஃபேஸ்புக் வீடியோவில் மன்னிப்பு கேட்டுள்ளார். Kasthuri Apology

நடிகை கஸ்தூரி எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்கம் தொடர்பான வழக்கு தொடர்பான தீர்ப்பு குறித்து தனது டுவிட்டர் பக்கத்தில் கருத்து பதிவிட்டார். அதில் 9ஐ குறிப்பிடும் விதமாக திருநங்கைகள் புகைப்படம் இடம்பெற்றது.

இதனால் திருநங்கைகள் சார்பில் அவர் மீது வழக்கு தொடரப்பட்டது. திருநங்கைகள் பலரும் கஸ்தூரி எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். நடிகை கஸ்தூரி அந்த பதிவை நீக்கியதுடன், மன்னிப்பு கேட்டுக்கொண்டார்.

ஆனால் அவரது பதிவை ஸ்கீரின் ஷாட் எடுத்து பலரும் அதை பயன்படுத்தி கஸ்தூரி குறித்த செய்திகளை வெளியிட்டு வந்தனர். இந்நிலையில் நடிகை கஸ்தூரி ஃபேஸ்புக்கில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில் எவ்விதம் உள்நோக்கமும் இல்லாமல் வேடிக்கையாக நினைத்து நான் வெளியிட்ட பதிவு நான் மிக மதிக்கும் எனது சகோதர, சகோதரிகள் பலரது மனதை புண்படுத்தியிருக்கிறது. இதற்காக நேற்றே மன்னிப்பு கேட்டேன். அந்தப் பதிவையும் நீக்கிவிட்டேன். அதன்பிறகும் நான் வெளியிட்ட சர்ச்சைக்குரிய பதிவை ஸ்கீரின் ஷாட் எடுத்து சிலர் பரப்புகிறார்கள். இது அந்த சகோதர சகோதரிகளின் மனதை புண்படுத்துவதுடன், என்னையும் காயப்படுத்துகிறது. தயவு செய்து இதை செய்யாதீர்கள்.

நானும் மனுஷிதான்! தவறு செய்யாமல் யாரும் இருந்துவிட முடியாது. இன்னும் நான் தவறு செய்வேன். அப்போ வச்சு செய்யுங்க. இப்போ இதை பிரச்னையாக்காமல் விட்டுவிடுங்கள்’ என கஸ்தூரி கூறியுள்ளார்.