அவன் ரொம்ப ரொம்ப நல்லவன்… அதான் என் பிரச்சனையே

My Story: My Future Husband is Too Good, That Scares Me a Lot!

எங்கள் மதத்தில் பெண்கள் மிகவும் கட்டுபாடுடன் தான் இருக்க வேண்டும். எனது சகோதரிகள், உறவுக்கார பெண்கள் என அனைவருமே பள்ளி செல்லலும் வரையிலும் தனது சீருடையின் மேலாக பர்தா அணியாமல் சென்றதே இல்லை, என்னைத் தவிர. என் மீது சிறுவயது முதலே என் அப்பாவிற்கு ப்ரியம் அதிகம். அதென்ன அவளுக்கு மட்டும் எந்த கட்டுப்படும் இல்லன்னு சிலர் கேட்டதும் உண்டு. ஆம்! எனக்கு சற்றே சுதந்திரம் அதிகம்.

எனக்கு நிறைய ஆண் தோழர்கள் இருக்கிறார்கள். நான் ஜீன்ஸ், டீ-ஷர்ட் அணிவதை கண்டு யாரும் எதிர்ப்பு கூறியது இல்லை. அதற்கென எனக்கு கொடுக்கப்பட்ட சுதந்திரத்தை நான் தவறாக பயன்படுத்திக் கொண்டதும் இல்லை. எல்லா பெண்களும் தங்கள் அப்பாவை தான் ஹீரோ என்பார்கள். ஆனால், எனக்கு அவர் ஒரு சூப்பர் ஹீரோ. அவர் எதையும் பிராக்டிகலாக பார்ப்பவர்.

ஒருவேளை பிறந்ததில் இருந்து 10 வருடம் அவர் என்னுடன் இருக்கவில்லை என்பதால் எனக்கு மட்டும் கொஞ்சம் கூடுதல் அன்பும், சுதந்திரமும் கொடுக்கிறாரோ என அனைவருக்கும் சந்தேகம் உண்டு. ஆம்! நான் என் அப்பாவிற்கு மூன்றாவது மகள். அப்பா, நான் பிறந்த ஓரிரு மாதங்களிலேயே சம்பாதிக்க அரபு நாடுகளுக்கு சென்றுவிட்டார். பத்து ஆண்டுகள் கழித்து தான் ஊர் திரும்பினார். இன்று நாங்கள் செல்வசெழிப்புடன் இருப்பதற்கு முக்கிய காரணம் அவரது உழைப்பும், தியாகமும் தான்.

என் வீட்டில் அனைத்து பெண்களுக்கும் இருபது வயதை தொடுவதற்குள் திருமணம் ஆகிவிடும். இதற்கு ஒரே விதிவிலக்கு நான் மட்டுமே. எனக்கு 25 வயதாகிறது. இந்த வருடத்தின் துவக்கத்தில் தான் எனக்கு மாப்பிளை பார்க்கும் படலம் துவங்கியது. ஆரம்பித்த சில வாரங்களிலேயே எனக்கான ஆண்மகன் தேர்வு செய்யப்பட்டார். அவர் நல்லவர் என்பதை தவிர, எனக்கு இந்த திருமணத்தில் விருப்பமில்லை என்று கூற எந்த ஒரு காரணமும் இல்லை….

மிகவும் நல்லவர்

அவர் மிகவும் நல்லவர். எங்கள் குடும்பத்தில் எப்படி அனைவரையும் கரைசேர்க்க அப்பா எனது வாழ்க்கையை நிறைய தியாகம் செய்தாரோ. அப்படி தான் அவரும். கஷ்டப்பட்டுக் கொண்டிருந்த குடும்பம். ஒரு மூத்த சகோதரி, மூன்று இளைய சகோதரிகள்.

அனைவருக்கும் திருமணம் செய்துக் கொடுத்து. வீடு வாசல் என செட்டிலாக மிகவும் உழைத்தவர் அவர் மட்டும் தான். அப்பா இல்லாத வீடு என்பதால் முழு பாரத்தையும் தனது தோள்களில் 16 வயதில் இருந்தே சுமந்துள்ளார்.

பெரிதாக வயது வித்தியாசமும் இல்லை

எனக்கும் அவருக்கும் பெரிதாக வயது வித்தியாசமும் இல்லை. எனக்கு 25, அவருக்கு 30. என்னைவிட ஐந்து வயது மூத்தவர். என்னைவிட உயரத்தில் ஒருஅடி உயர்ந்தவர். நிறத்தில் மட்டும் கொஞ்சம் மாநிறம். ஆனால், குணத்தில் பால் வெள்ளை. குடும்ப தலைவர் வெளிநாட்டில் வேலை செய்வதால் என்ன நன்மைகள், தீமைகள் என அனைத்தும் அறிந்தவள் நான். இவரும் வெளிநாட்டில் தான் வேலை செய்து வருகிறார். திருமணம் ஆனால், சில மாதங்களில் மீண்டும் வெளிநாடு சென்றுவிடுவார். ஓராண்டுக்குள் முழுமையாக திரும்பிவிடுவார் என்ற போதிலும், அதில் எனக்கு உடன்பாடில்லை.

பாட்டி கல்யாணத்துக்கு முட்டுக்கட்ட போட

எனது சகோதரிகளின் கணவர்கள் அனைவரும் மிகவும் அழகானவர்கள். இவர் மட்டும் கொஞ்சம் மாநிறம் என்பதால். ஏன், எனது இளைய பேத்திக்கு மட்டும் வஞ்சனை செய்கிறாய் என அப்பாவிடம் ஆரம்பத்தில் இருந்தே கோபித்துக் கொண்டவர் பாட்டி தான். அப்பாடா, எப்படியோ பாட்டி கல்யாணத்துக்கு முட்டுக்கட்ட போட ஹெல்ப் பண்ணுதுன்னு நானும் எதுவும் பேசாமல் இருந்தேன். அவர் வீட்டுக்கு வந்த பேசிய முதல் சந்திப்பிலேயே அவரது பால் குணத்தை கண்டு முதல் ஆளாக கிளீன் போல்டானவர் பாட்டி தான்.

எனது சொந்த காலில் நிற்க வேண்டும்

நான் இந்த கல்யாணத்தை நிறுத்த ஒரே காரணம் நான் எனது சொந்த காலில் நிற்க வேண்டும். நான் ஒரு ஸ்டார்ட்-அப் கம்பெனி ஆரம்பிக்க நீண்ட நாட்களாக திட்டமிட்டு வருகிறேன். அப்பாவும் சரி என்று தான் கூறி வந்தார். ஆனால், 25 வயதாகியும் ஏன் திருமணம் செய்யவில்லை என அக்கா, மாமா முதல் உறவினர்கள், நண்பர்கள் வரை அனைவரும் அப்பாவை டார்ச்சர் செய்து இந்த கல்யாணத்திற்கு முடிவு செய்துள்ளனர்.

சப்போர்ட்!

ஒருவேளை அக்காள்களுக்கு கிடைக்காத சுதந்திரம் எனக்கு கிடைத்ததால் தான் நான் இப்படி அடம்பிடித்து திருமணத்தை தட்டிக்கழித்துக் கொண்டே இருக்கிறேனோ என அம்மாவுக்கு என் மீது கோபம். யார், என்ன கூறினாலும் அப்பாவின் சப்போர்ட் இருந்ததால் இத்தனை காலம் ஓட்டிவிட்டேன். ஆனால், இன்று அப்பாவும் எனக்கு சப்போர்ட்டாக இல்லை என்பது தான் வருத்தம். அனைவரும் கூடிப் பேசி அப்பாவின் மனதையும் மாற்றிவிட்டனர்.

சின்ன வயதில் இருந்தே நான் அப்பா செல்லம். ஒரு ஐந்து நிமிடம் அப்பாவிடம் தனியாக பேச நேரம் கிடைத்தால் போதும். அந்த சந்தர்பத்தை பயன்படுத்தி, எனக்கு சாதகமாக அவரை மாற்றிக் கொள்வேன். தொடர்ந்து ஓரிரு வாரங்கள் வீட்டில் ஆட்கள் நிறைந்திருந்ததால்., எனக்கு அந்த ஐந்து நிமிடங்கள் கிடைக்காமல் போனது. அதற்குள் இவர்கள் இந்த மாப்பிள்ளையை முடிவு செய்து விட்டனர்.

ஒரு நாள் அப்பாவின் அலுவலகத்திற்கு சென்றிருந்தேன். அப்பாவிடம் வெளியே போக வேண்டும் என்று கூறி பார்க் அழைத்து சென்றேன். அப்பாவிற்கு தெரிந்துவிட்டது நான் எதற்கு பிளான் போட்டு தான் அழைத்து செல்கிறேன் என. எப்படியோ பேசி, அவரது மனதை மாற்றிவிட்டேன். ஆனால், வீடு வரை வந்து பேசி, முடிவான மணமகனை எப்படி மாற்ற முடியும் என கேள்விக் கேட்டார் இது,குடும்ப பெயரை கெடுத்துவிடும் என்றும் கூறினார்.

அப்பா ஒரு ரெண்டு வருஷம் மட்டும் டைம் கொடுங்க. நான் என்னோட ஸ்டார்ட்-அப் கம்பெனி மட்டும் ஸ்டார் பண்ணிடுறேன்.அப்பறம் கண்டிப்பா கல்யாணம் பண்ணிக்கிறேன் என கூறினேன். ஆனால், எப்படி இரண்டு ஆண்டுகள் திருமணத்திற்கு கால ஆவகாசம் கேட்க முடியும். ஆறேழு மாதங்கள் என்றால் கூட ஒப்புக் கொள்வார்கள். ஆனால், இது மிகவும் கஷ்டம் என அப்பா கூரினார்.

அப்பா வேலை விஷயமாக ஒருநாள் வெளியூர் சென்றிருந்தார். திடீரென ஒரு கால், அப்பா கீழே விழுந்துவிட்டார் என்றும், அங்கே அருகே இருந்த அப்பாவின் நண்பரின் மருத்துவமனையில் அனுமதுத்துள்ளதாக கூறினார். பதறியடித்து அனைவரும் மருத்துவமனை சென்றோம். காலில் முறிவு ஏற்பட்டுள்ளது, எல்லாம் சரியாகிவிடும். ஆறேழு மாதத்தில் அவர் நார்மலாக நடக்க ஆரம்பித்துவிடுவார் என்று கூறினார்கள். அனைவரும் அப்பாவை சூழ்ந்தே இருந்தனர். மூன்று நாட்களில் டிஸ்சார்ஜ் செய்து வீட்டுக்கு அழைத்து வந்தோம்.

மாஸ்டர் பிளான்!

அப்பா நடக்க மிகவும் கஷ்டப்பட்டார். கட்டை பிரித்து, கட்ட வேண்டும் என அப்பாவுடன் மருத்துவமனைக்கு சென்றேன். அப்போது தான் அப்பாவின் மாஸ்டர் பிளானும், என்மீது அவர் எத்தனை அன்பு வைத்துள்ளார் என்றும் தெரிந்துக் கொண்டேன். அப்பாவுக்கு காலில் முறிவு ஏற்படவில்லை. நான் கேட்ட இரண்டாண்டு அவகாசத்திற்கு போட்ட மாஸ்டர் பிளான் தான் இது. எனவே, தன்னால் முடிந்த வரை ஒரு வருடத்திற்கு இந்த திருமணத்தை தள்ளி வைக்க உதவுகிறேன் என கூறினார். ஒரு பக்கம் அப்பாவின் அன்பை நினைத்து மகிழ்ச்சியும், மறுமுறை அதிகமாக அவரை கஷ்டப்பட்டுதுகிறேனோ என அழுகையும் வந்தது.

உண்மையை கூறிவிடலாம்!

என்ன தான் இருந்தாலும்,தினமும் அப்பா கால் உடைந்தது போல நடப்பதை என்னால் பார்த்துக் கொண்டிருக்க முடியவில்லை. எனக்கு பார்த்த மாப்பிள்ளைக்கு கால் செய்து நடந்த உண்மைகளை கூறி, திருமணத்தை நிறுத்திவிடலாம் என யோசித்தேன். ஒரு நிமிடமும் தாமதிக்காமல் போன் செய்தேன். எனக்கென மீண்டும், மீண்டும் அதிர்ச்சிகள் காத்திருந்தன. ஆனால், அனைத்தும் எனக்கு சாதகமாகவே அமைந்தது

கால் செய்து அனைத்து உண்மைகளும் கூறினேன். ஓரிரு நிமிடங்கள் எந்த பதிலும் இல்லை. கோபமடைந்துவட்டார் என கருதினேன். இரண்டாண்டுகள் கஷ்டம். ஒன்றரை ஆண்டுகள் போதுமா என்று கேட்டார். எனக்கு ஏதும் புரியவில்லை. எப்படியும் நான் இங்கிருக்கும் ஆறு மாதங்களுக்கு மேல் திருமணத்தை தள்ளிப் போட முடியாது. அதன் பின் நான் வெளிநாடு போய் திரும்ப ஒரு வருடம் ஆகும். ஒன்று செய்யலாம். இப்போது நிச்சயம் மட்டும் செய்துக் கொண்டு, ஒன்றரை ஆண்டு கழித்து திருமணம் செய்துக் கொள்ளலாம் என்றார். என் வீட்டார் மூலமாகவே பேச சொல்கிறேன் பயப்படாமல் ஸ்டார்ட்-அப் துவங்க வேண்டிய வேலைகளை பார் என்று கூறி அழைப்பை துண்டித்தார்.

இவ்வளோ நல்லவரா?

நான் இப்படி ஒரு நல்லவரை என் வாழ்வில் கண்டதில்லை. ஒரு பக்கம் எனக்காக என்ன வேண்டுமானாலும் செய்யும் அப்பா. இன்னொரு பக்கம் என்னுடன் ஓரிரு முறை மட்டுமே பேசி பழகியவர். எனது கனவுக்காக ஒன்றரை ஆண்டு காலம் திருமணத்தை தள்ளி வைக்க ஒப்புக் கொள்கிறார். இவ்வளவு நல்லவர்கள் இந்த உலகத்தில் இருப்பார்களா? என்ற கேள்வு என்னுள். நான் பாக்கியசாலி என்பதை தவிர வேறு எதுவும் என்னால் கூற முடியாது.

அவர் நல்லவர் என்பது மட்டுமே எனது அச்சம். இப்படிப்பட்ட நல்லவர்களை எளிதாக யாரும் ஏமாற்றிவிட கூடும். வரும் டிசம்பர் மாதம் எங்களுக்கு நிச்சயம் நடக்கவிருக்கிறது. நானும், என் அப்பாவும் போட்ட நாடகம் பற்றி வேறு யாராவது அறிந்திருந்தால் கண்டிப்பாக கல்யாணத்தை நிறுத்தியிருப்பார்கள். ஆனால், எனது வருங்கால கணவரோ… என் கனவுக்கு வழிவிட்டு திருமணத்தை தள்ளிப்போட சம்மதம் தெரிவித்துள்ளார்.

எனக்குள் பலவிதமான பதட்டங்கள். ஒருவேளை நடக்காது என நினைத்த கல்யாணம் நடக்கவிருப்பதால். ஒருவிதமான கல்யாண பதட்டமா என தெரியவில்லை. இல்லை எப்படி எனது மனநிலையை வெளிப்படுத்துவது என அறியவில்லை. எனக்கு இப்படி ஒரு அப்பா, கணவன் வாய்க்க நான் எந்த ஜென்மத்தில் புண்ணியம் செய்தேனோ தெரியவில்லை.

You may also like...