காதலித்தவனும் வேசியாக்கினான், கட்டியவனும் வேசியாக்கினான்…

நான் கடந்து வந்த பாதை… எனது 15வது வயதில் துவங்கியது. அப்போது தான் நான் முதன் முதலில் காதலில் விழுந்தேன். நாங்கள் இருவருமே ஒருவரை ஒருவர் மிகவும் நேசித்தோம். ஆனால், அவனை என் குடும்பத்தார் ஏற்க மாட்டார்கள். ஏனெனில், அவன் என் குடும்பத்தை காட்டிலும் கீழ் சாதி என்ற அவர்களது கோட்பாடு எங்கள் காதலை ஏற்காது என்பதை நான் அறிவேன்.

15 வயதில் அப்படி என்ன காதல் வந்தது என்று நீங்கள் கேட்கலாம். ஏனெனில், நான் என் சொந்த வீட்டில், உடன் பிறந்த சகோதரனால் பாலியல் வன்கொடுமைக்கு ஆளானேன். இந்த உண்மையை என் பெற்றோரிடம் கூறினேன்… நான் பொய் கூறுகிறேன் என்று கூறி என்னையே அடித்தார்கள்.

அவர்கள் (பெற்றோர்) எனக்கு உண்டாக்கிய வலியை விட அதிகமான வலியை கொடுத்தனர். என் காதலை உடைத்தனர். என் சந்தோஷம் உடைந்து போனது. அப்போது எனக்கு இருபது வயது இருக்கும், என்னை சுற்றி இருக்கும் அனைத்து அசிங்கங்களையும் விட்டு வெளியே வரவேண்டும் என்ற நிலையில் இருந்தேன்.

அப்போது தான் என்னைவிட ஏழு வயது மூத்த ஆண் ஒருவன் என்னை திருமணம் (வெறும் அழகுக்காக) செய்துக் கொள்ள வந்தான். ஏற்கனவே, ஒரு காதலால் உடைந்திருந்த நான்… அடுத்த சில வருடத்தில் எடுத்த ஒரு தவறான முடிவு இது.

அவனை திருமணம் செய்துக் கொள்ள சம்மதித்தேன்.

அவன் என்னை திருமணம் செய்துக் கொள்ள வேண்டும் என்பதோடு, ஒரு நிபந்தனையும் வைத்தான். திருமணத்திற்கு முன் என்னுடன் உறவு வைத்துக் கொள்ள வேண்டும் என்றான். உறவு கொண்டோம், நான் கர்ப்பமானேன். பிறகு தான் அறிந்துக் கொண்டேன்.

நான் கருத்தரிக்காமல் போயிருந்தால், அவன் என்னை திருமணமே செய்திருக்க மாட்டான் என்று.

எங்கள் திருமணம் நடந்தது. நாங்கள் சமூகத்தில் ஒரு மகிழ்ச்சியான தம்பதியாக வலம்வந்தோம். இந்த சமூகம் ஒரு பெண் திருமணமாகி, குழந்தையுடன் தலை நிறைய பூ வைத்துக் கொண்டு, கழுத்து நிறைய நகை அணிந்துக் கொண்டு, உடலை நன்கு ஆடம்பரமான உடையுடன் சுற்றி வந்தால்… அடடே! அவ எவ்வளவு சந்தோஷமா இருக்காளே! என்று உச்சுக்கொட்டும்.

வெளியே செல்லும் போதுமட்டுமே எஜமானி போல இருப்பேன். வீட்டுக்குள் நான் ஒரு வேலைக்காரி மட்டுமே. அவன் என் முக அழகை ரசித்து திருமணம் செய்ய வந்தான் என நினைத்தேன்.

திருமணத்திற்கு பிறகு தான் அவன் என் உடல் அழகை ரசித்து திருமணம் செய்ய வந்தான் என்று தெரிந்துக் கொண்டேன். வீட்டு வேலை செய்ய, குழந்தைகள் மற்றும் அவரது தாயை பார்த்துக் கொள்ள வேண்டிய ஒரு ஆயாவாக தான் இருந்தேன்.

இப்படியாக என் வாழ்வில் 11 வருடங்கள் கடந்தன.

ஒரு நாள் ஃபேஸ்புக் செக் செய்துக் கொண்டிருந்த போது எனது முதல் காதலனுக்கு தவறுதலாக ஃபிரெண்ட்ஷிப் ரெக்வஸ்ட் அனுப்பிவிட்டேன். அவனும் அதை ஏற்றுக் கொண்டான்.

அதன் அடுத்த நாளே அவனது மனைவியிடம் இருந்து ஒரு வார்னிங் செய்தி வந்தது. புரிந்துக் கொண்டேன். நான் அவனை தொந்தரவு செய்யக் கூடாது என்று அவர் விரும்புகிறாள்.

அதற்கு அடுத்த நாள் ஒரு தெரியாத எண்ணில் இருந்து எனக்கு அழைப்பு வந்தது. அது எனக்கான சர்பரைஸ் என்று முதலில் நான் அறிந்திருக்கவில்லை.

அவன் தான் அழைத்திருந்தான்… மனைவி அனுப்பிய செய்திக்கு இவன் மன்னிப்பு கேட்டான். தன் மனைவி மிகவும் கோபக்காரி என்றும், முரட்டுத்தனமான குணாதிசயம் கொண்டவள் என்றும் கூறினான்.

நாங்கள் இருவரும் தினமும் பேசிக் கொள்ள துவங்கினோம். திருமண உறவை கடந்து எங்களுக்குள் ஒரு உறவு பூத்தது. என்ன நடந்தாலும், எனக்காக என்ன வேண்டுமானாலும் செய்வேன் என்று கூறினான்.

ஒருவேளை நம்மை பற்றி நம் குடும்பத்தார் அறிந்துக் கொண்டால் என்ன செய்வது என்று அவனிடம் முன்னரே கேட்டேன். அதற்கு, மனம் முழுக்க தான் அவன் நேசித்து ஒரே பெண் என்று கூறினான். மீண்டும் அவன்மேல் காதலில் விழுந்தேன்.

எங்களுக்குள் உடலுறவும் இருந்தது. மிக ஆழமான, மன நிறைவான உறவது. ஆனால், அவன் கூறியது போல அவன் மனைவி ஒன்றும் மோசமானவள் எல்லாம் இல்லை. என்னிடம் அவள் மிகவும் மோசமானவள் என்று கூறினான். உண்மையில், அவர்கள் இருவரும் மகிழ்ச்சியான உறவில் தான் இருந்து வந்தனர். அவனை குருட்டுத்தனமாக நம்பினேன்.

ஒரு நாள் எங்கள் குடும்பத்தில் இந்த உறவு அறிய வந்தது. என்னை காப்பாற்றுவேன் என்றவன், தன் மனைவி பக்கம் சாய்ந்தான். அவனுக்கும் வேண்டியது எனது உடலானதாக மட்டுமே இருந்தது.

என்னை இதை ஏற்க முடியாவில்லை. அவனது இன்பத்திற்காக என்னை பயன்படுத்திக் கொண்டான். அவன் மனைவியிடமும், என் கணவரிடமும் மன்னிப்பு கோரினேன். ஆனால், யாரும் ஏற்பதாக இல்லை.

தவறு செய்தது இருவராயினும், வாழ்க்கை இழந்தது நான் மட்டுமே. அவன் தனது மனைவியுடன் சந்தோசமாக தான் இருக்கிறான். ஆனால், என் கணவரின் அப்பாவழி சொந்தம் ஒருவர் மட்டுமே எனக்கு ஆதரவாக பேசுகிறார்.

நான் என் கணவரிடம் விவாகரத்து கூட கேட்டுப் பார்த்து விட்டேன். ஆனால், அவர் தர மறுக்கிறார். என்னை ஒரு வேலைக்காரியாக மட்டுமே நடத்தி வருகிறார். நான் அவரது பெற்றோரை கவனித்துக் கொள்ள வேண்டும் அவ்வளவு தான்.

ஒருமுறை தற்கொலைக்கும் முயன்றேன். ஆனால், மரணமும் என்னை விரும்பவில்லை. நான் செய்தது தவறெனில் கடவுள் என்னை மன்னிக்கட்டும். உண்மையான காதலை வேண்டி, மீண்டும், மீண்டும் ஏமாற்றப்பட்டவளாகி நிற்கிறேன்.

என்னை திருமணம் செய்துக் கொள்ள வந்தவனும், என் உடலை மட்டுமே வேண்டினான். என்னை மனதார நேசித்தவன் என்று கூறியவனும் என் உடலை மட்டுமே வேண்டினான். வாழ்நாள் முழுக்க நான் வெளிப்படுத்திய அதே நேசம், எனக்கு கிடைக்கவே இல்லை. இனி, கிடைக்கவும் வாய்ப்புகள் இல்லை.