அரசியலுக்கு அழைப்பு விடுத்த கமலுக்கு விஜய் நன்றி

பிரபல் சமூகவலைதளமான ட்விட்டர் சார்பில் சமீபத்தில் நடந்த வணக்கம் ட்விட்டர் பகுதியில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவரும், நடிகருமான கமல்ஹாசன் ரசிகர்களின் பல்வேறு கேள்விகளுக்கு பதிலளித்தார்.

அப்போது ரசிகர் ஒருவர், விஜய் அரசியலுக்கு வந்தால் வரவேற்பீர்களா? என கமல்ஹாசனிடம் கேள்வி கேட்க, கமல் அளித்த பதிலில், எனது அனைத்து தம்பிகளையும் அரசியலுக்கு வரவேற்கிறேன். அதுவும் இவர் எனக்கு மிகவும் பிடித்த தம்பி, எனக்கு மட்டுமல்ல, அனைவருக்குமே பிடித்த தம்பி, கண்டிப்பாக வரவேற்கிறேன் என்று கூறியிருந்தார்.

கமலின் இந்த பதிலைக் கண்ட விஜய்யின் ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்து ட்விட்டரில் விவாதித்தனர். சமூக வலைதளம் தொடங்கி ஊடகங்களில் கமல் தெரிவித்த கருத்து செய்தியானதை தொடர்ந்து, விஜய்க்கும் தகவல் எட்டியது.

இந்நிலையில் அரசியலில் தன்னை வரவேற்ற நடிகர் கமல்ஹாசனை போனில் அழைத்து விஜய் நன்றி தெரிவித்ததாக தகவல் வெளியாகியுள்ளது. இருப்பினும் விஜய் தரப்பினர் இச்செய்தியை உறுதி செய்யவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.